வெள்ளி, 5 ஜூலை, 2019

சிதறல்கள்



மாடிப் படி அடுக்குகளின்
திருப்பங்கள்!
பெருந்தூண்களின் மறைவுகள்!
அப்பெரு மரக்கூட்டத்தின்
அடர் நிழல்!
வடிவிழந்து வெளிறிப் போன
கதவுகளின் இடுக்குகள்! -என
உன் உருவம்
தென் பட காத்திருந்த நினைவுகள்! 
கண்டதும் பரிமாறிய
விழி மிளிர்ந்த மெல்லிய புன்னகை!
இளந்தூறலின் துளிகள் சுமந்த அச்சிறு
வெள்ளை பூக்களின்
மொழி அறிகிறேன் இப்போது! 

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

படலம்

ஒரு மெல்லிய திரை!
அப்புறத்தில் அடித்த சாரலில்
வழிந்தோடும் நீர்க் கோடுகள்....
கொஞ்சமாக தொட்டுவிடத் தோன்றி
சிறு கிழிசல் தேடுகிறேன்...
உன்னுள் நிகழ்பவற்றின் பதிவைக் காண்கிறேன்!
பகிர்ந்து கொள்ள வாய்க்கவில்லை!
விழைந்தும் விலகவே முற்படுகிறேன்...
இதோ அகப்படுகிறது
ஒரு விரலிடுக்கு வாயில்!
உள்ளுணர்வின் பேரில்
அடைத்தும் விடுகிறேன்...
திரை திடப்படுகின்றது!

ஞாயிறு, 9 ஜூலை, 2017

அடையாளங்கள்


ஆழ்ந்து லயித்தக் கனவுகள்...
என் மீது படர்ந்து
பரவிய வண்ணங்கள் ....
இருள் அப்பிய சாலைகளின்
நிசப்தத்தில் கசிந்து
எங்கிருந்தோ வரும் மெல்லிய பாடல் ...
என்று கவிதைகள்
எழுதித் திரிந்திருக்கிறேன் ...
பின்பு ஒரு நாள்
ஒரு நீண்ட நெடிய பொழுதில்  என்னைத்
தொலைத்துவிட்டேன்...
திருப்பி மீட்கையில்
திரிந்துவிட்டிருந்த என்னில்
மீண்டும் படர்கின்றன நிறங்கள்
புதிய பரிமாணங்களில்...
இதோ சன்னமாய்
இழைகின்றது வடிவில்லாவொரு இசை ..

புதன், 12 ஏப்ரல், 2017

எழுத மறந்த குறிப்புகள்

நெடுந்தூரம் வரை வந்துவிட்டேன்!
பயணம் கடிதில்லை!
பரிமாறக் கூடவில்லை!
நெகிழ்ந்து களித்து
சேகரித்து பூரித்த
என் கவிதைகள் வார்த்தைகளாக
மட்டுமே இறைந்து கிடக்கின்றன..
திரும்ப சேர்க்க வலிந்தும் களைத்து
விழைவு நீர்த்து தோற்கிறேன்...
காலம் மட்டுமே உண்மையாகிய
வெளிகளின் பரிமாணங்களில்
ஒலி வடிவமற்றதாகிவிடுகிறது...
எனினும் அவற்றின் அழுத்தம்
அளவீட்டிற்கு அப்பாற்படுகிறது.....
உற்று நோக்கின்
விரிந்து விழுங்கிவிடும் நீல வெளி!
இல்லை என்றே கடப்பது எளிதாகிவிடுகிறது!

ஞாயிறு, 9 நவம்பர், 2014

புலப்படா ஒலிகள்

அவன்
ஒலிக்கவிட்ட பாடல்கள்
நான் அறிந்திருக்கவில்லை .......
ஒலித்ததின் விழைவு  
புரிந்தும் தெளிந்திருக்கவில்லை .........
என் தனிமை கணத்தில்
நான்
இசைக்கவிடுகையில்
எனென்றும் எதற்கென்றும்
புலப்படாது சிறு
கள்ளப்புன்னகை மட்டும்
வளைகிறது .....



புதன், 5 நவம்பர், 2014

இலையுதிர் காலம்

நானும் மற்றுமொரு
சருகென பிரிகிறேன்....
நதியின் சலசலப்பில்
தொலைந்து மேலெழும்புகிறேன்...
வண்ணம் மாறி
எண்ணம் மாறி
நான் வகுத்திடா
விதிகளை அனுசிரிக்கிறேன்...
அறிந்திராத திருப்பங்களில்
சற்றே தள்ளாடுகிறேன்....
அமிழ்ந்தும் எழுந்தும்
நீரின் திசையோடு
பயணிக்கிறேன் ....
கண்டிராக்   காட்சிகளினோடு
பயணம் மாத்திரமே
நிதர்சனம் என்றாகிறது
 எனக்கு....

புதன், 2 ஜூலை, 2014

சட்டென ஒரு சாரல்

சட்டென  ஒரு சாரல்


 எங்கோ ஒரு 
புதிய ஊரில் 
வேரோ கிளையோ 
தேடி அலையும் 
கனத்த நாட்களில்... 
என் பூமி காலடியில் 
தொலைந்து கொண்டிருக்கையில் 
சட்டென 
கொட்டிவிட்ட மழை
என்னை ஏதோ ஒரு 
புலப்படா 
இழையோடு இணைக்கிறது ...